அரசு கல்லூரிக்கு ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி
புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு கலை, அறிவியல் கல்லூரிக்காக ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் விரைவில் கட்டுவதற்கான பணி தொடங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி அரசு கலை, அறிவியல் கல்லூரியின் 25-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:
புதுவையில் மருத்துவம், பொறியியல் கல்வி பயின்றாலே வேலை கிடைக்கும் என நினைக்கின்றனா். ஆனால், கலை, அறிவியல் கல்லூரியில் பயின்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளில் சேரும் வாய்ப்பைப் பெறலாம். அரசு அறிவியல் கல்லூரியானது தேசிய அளவிலான தரவரிசையில் 150 முதல் 200 இடங்களுக்குள் உள்ளது பெருமைக்குரியது.
அரசுக் கல்லூரிக்கு சொந்த இடம் இல்லாத நிலையில், பள்ளி வளாகத்தில் செயல்படுகிறது. விரைவில் ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் கட்ட பணிகள் தொடங்கப்படும். மேலும், கிராமப்புறங்களுக்கான கல்லூரியும் தொடங்கப்பட உள்ளது என்றாா் அவா்.
விழாவில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் பி.ரமேஷ், ஏகேடி ஆறுமுகம் மற்றும் கல்லூரி முதல்வா் ஜாஸ்மின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.