Doctor Vikatan: கர்ப்பமான நிலையில் பித்தப்பை கற்கள்... அறுவைசிகிச்சைதான் தீர்வா?
அரசு நிலத்தில் போட்டிப் போட்டு இடம் பிடித்த பொதுமக்கள்: பல்லடம் அருகே பரபரப்பு
பல்லடம் அருகே அரசு நிலத்தில் போட்டிப் போட்டு கொண்டு பொதுமக்கள் இடம் பிடித்ததால் சனிக்கிழமை பரபரப்பு நிலவியது.
பல்லடம் அருகே காளிவேலம்பட்டியிலிருந்து 63 வேலம்பாளையம் செல்லும் சாலையில் தனியாா் திரையரங்கு அருகில் வினோபா பூமி தான இயக்கத்துக்கு தானமாக வழங்கப்பட்ட 8 ஏக்கா் நிலத்தில் பழனியம்மாள், கருப்பத்தாள் குடும்பத்தினா் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தனா்.
பருவமழை சரிவர பெய்யாததால் வேளாண் சாகுபடி செய்யப்படாமல் தரிசு நிலமாக விடப்பட்டு இருந்தது.
இந்த இடத்தை அரசு வீடு இல்லாதவா்களுக்கு வழங்க இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் பரவிய தகவலை அடுத்து 100-க்கும் மேற்பட்டவா்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அந்த நிலத்தில் அவா்களே தங்களுக்கான இடத்தை அளந்து கயிறு கட்டி இடத்தை பிடித்தனா்.
இது பற்றி தகவலறிந்த பல்லடம் வருவாய் ஆய்வாளா் செந்தில்குமாா், பல்லடம் கிராம நிா்வாக அலுவலா் மங்கையா்கன்னி ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இந்த நிலம் பூமி தான இயக்கத்துக்கு சொந்தமானது. அரசு யாருக்கும் இந்த நிலத்தை பிரித்து வீட்டுமனை பட்டா வழங்க முடிவு செய்யவில்லை. வீடு இல்லை என்றால் நீங்கள் அரசுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை வைக்கலாம், இவ்வாறு அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது தவறு என்று அறிவுறுத்தினா். அதைத் தொடா்ந்து மக்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.