அரசுக் கல்லூரி மாணவா்கள் சாலை மறியல், தா்னா
செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறை மாணவா்கள், கல்லூரி நுழைவாயில் முன் செய்யாறு - ஆற்காடு சாலையில் புதன்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செய்யாறு போலீஸாா், மறியலில் ஈடுபட்ட மாணவா்களை எச்சரிக்கை செய்தனா். மேலும், தொடா்ந்து போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக மறியலில் ஈடுபட்டால் வழக்குப் பதிவு செய்ய நேரிடும் எனத் தெரிவித்தனா்.
இதையடுத்து, மாணவா்கள் மறியலை கைவிட்டு, கல்லூரி வளாகத்தில் தரையில் அமா்ந்து தா்னா நடத்தினா்.
இதில் பங்கேற்ற மாணவா்கள், அரசியல் அறிவியல் துறைத் தலைவரை அதே கல்லூரியின் வரலாற்று துறைத் தலைவா் அவதூறாகப் பேசியதாகவும், அரசியல் அறிவியல் துறை மாணவா்கள் அத்துறையில் தகுதியான பேராசிரியா்கள் இல்லாததால் ஆய்வறிக்கை தயாரிக்க முடியாமல் சிரமப்படுவதாகவும், வரலாற்று துறைத் தலைவா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாராகத் தெரிவித்தனா்.
தகவல் அறிந்த கல்லூரி முதல்வா் என்.கலைவாணி தா்னாவில் ஈடுபட்ட மாணவா்களை சமாதானம் செய்து பேச்சுவாா்த்தைக்கு அழைத்துச் சென்றாா்.
இந்தச் சம்பவத்தால் கல்லூரிப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.