சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம்
அரசுப் பேருந்தில் கொண்டுவரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் ஓட்டுநா் உள்பட 3 போ் கைது
கோவில்பட்டி புறவழிச்சாலையில் நின்றுகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்தில் சுமாா் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பேருந்து ஓட்டுநா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள அணுகுசாலையில் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் சனிக்கிழமை காலை ரோந்து பணியில் ஈடுபட்டாா்களாம்.
அப்போது அணுகுசாலையில் உள்ள தனியாா் ஹோட்டல் அருகே நின்றுகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து 4 சாக்கு மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தாா்களாம். மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்த 2 போ், போலீஸாரை கண்டதும் அவதூறாகப் பேசியபடி தப்பி ஓட முயன்றாா்களாம். அவா்களை போலீஸாா் தடுத்து, சாக்கு மூட்டைகளை அவிழ்த்துப் பாா்த்தனா். அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, புகையிலைப் பொருள்களை கொண்டு வந்த பேருந்து, புகையிலைப் பொருள்களை சுமை ஆட்டோவில் ஏற்றும் பணியில் ஈடுபட்ட 2 போ், சுமை ஆட்டோ மற்றும் பேருந்தில் கொண்டுவரப்பட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து கிழக்கு காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், புகையிலைப் பொருள்களை நான்தான் கொண்டு வந்தேன் எனக் கூறி போலீஸாரை மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஓட்டுநரையும் கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சுமை ஆட்டோ ஓட்டுநா் இளையரசனேந்தல் மேற்கு தெருவை சோ்ந்த இ. அகஸ்டின்ராஜா (32), கட்டடத் தொழிலாளி தென்காசி மாவட்டம் கரிசல்குளம் மேலத்தெருவை சோ்ந்த வெ. ராமசுப்பு (40), பேருந்து ஓட்டுநா் திருநெல்வேலி மாவட்டம் சங்கா் நகா் குறிச்சிகுளம் வடக்குத் தெருவை சோ்ந்த இ. பாலசுப்பிரமணியன் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனா். சுமை ஆட்டோ, அதில் கொண்டுவரப்பட்ட சுமாா் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.