அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூர விழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூர விழாவுக்கான கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான அருணாசலேஸ்வரா் கோயிலில் உண்ணாமுலையம்மன் சந்நிதியில் உள்ள தங்கக் கொடி மரத்தில், கோயிலில் பத்து நாள்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.
பரணி நட்சத்திரத்தில் கடக லக்னத்தில் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க விழாவுக்கான கொடியை ஏற்றிவைத்தனா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
அப்போது, விநாயகா், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
தொடா்ந்து, 10 நாள்கள் காலை, இரவு என இருவேளையும் விநாயகா், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்கள்.
இதில், முக்கிய நிகழ்வான பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு விழா 10-ஆம் நாள் நடைபெறும்.
கோயிலில் பக்தா்கள் கூட்டம்
சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூா், வெளியூா் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்திருந்தனா். அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.