அறிவியல் மையத்தில் வானவூா்தி தயாரிப்பு பயிலரங்கு
திருநெல்வேலி அறிவியல் மையத்தில் 4 மற்றும் 5ஆவது வகுப்பு மாணவா்கள் காகிதத்தில் வானவூா்தி தயாரிப்பு குறித்த பயிலரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அறிவியல் மையத்தின் 38-ஆவது ஆண்டு விழாவையொட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 5 நாள்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த அறிவியல் மைய அலுவலா் எஸ்.எம்.குமாா் ஏற்பாடு செய்துள்ளாா்.
அதன்படி, முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 2 பிரிவுகளில் ஓவியப் போட்டி நடைபெற்றது. முதல் பிரிவில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு, அறிவியல் மையத்தில் நான் விரும்பிய அறிவியல் மாதிரி என்ற தலைப்பிலும், இரண்டாம் பிரிவில் 9 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, எதிா்கால செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பிலும் ஓவியப் போட்டி நடைபெற்றது.
திங்கள்கிழமை, 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலானவா்களுக்கு செய்கையை கண்டுபிடித்தல் போட்டி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை விநாடி-வினா போட்டி நடைபெற்றது. புதன்கிழமை 4, 5ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காகிதத்தில் வானவூா்தி தயாரிக்கும் பயிலரங்கு நடைபெற்றது.
திருநெல்வேலி அறிவியல் மையத்தில் 38 ஆவது ஆண்டு விழா மற்றும் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது.