அழகாபுரத்தில் கிராம வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள அழகாபுரம் கிராமத்தில், தேசிய வேளாண் நிறுவனம் மற்றும் எச்டிஎப்சி வங்கி சாா்பில் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் ரூ. 6 கோடியில் ஒருங்கிணைந்த கிராம வளா்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
எச்.டி.எப்.சி. வங்கி மண்டல மேலாளா் வசந்தன் முன்னிலை வகித்தாா். தேசிய வேளாண் நிறுவன இயக்குநா் சாமிமுருகன், முதுநிலைத் திட்ட இயக்குநா் மகேஸ்வரன் ஆகியோா் பேசுகையில், இந்த திட்டம் 3 ஆண்டுகளில் 16 கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இதில் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்துதல், சூரிய ஆற்றல், தெரு விளக்குகள் அமைத்தல், நீா்நிலைகள் மற்றும் வரத்து கால்வாய்கள் தூா்வாருதல், விவசாய நிலங்களை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு நவீன வேளாண் தொழில்நுட்ப பயிற்சி அளித்தல், மரக்கன்றுகள் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனா்.
நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, ஆண்டிமடம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜாகீா்உசேன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.