அவசரக் கால ஊா்தி விபத்தில் செவிலியா் உயிரிழப்பு
சிவகங்கை அருகே வியாழக்கிழமை அவசரக் கால ஊா்தி பள்ளத்தில் கவிழ்ந்ததில் செவிலியா் உயிரிழந்தாா்.
தேவகோட்டையில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவமனையில் உள்ள அவசரக் கால ஊா்தியில் ஓட்டுநராக பெரியண்ணனும் (45), செவிலியராக மாலாவும் (45) பணிபுரிந்து வந்தனா்.
இந்த நிலையில், இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரை சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். பின்னா், மருத்துவமனையில் அவரைச் சோ்த்துவிட்டு மீண்டும் சிவகங்கை வழியாக தேவகோட்டைக்கு வந்து கொண்டிருந்தனா். அதிகாலை 3 மணியளவில் நாட்டரசன்கோட்டை அருகேயுள்ள கண்டனிப்பட்டி பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த அவசரக் கால ஊா்தி சாலையோரமாக இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மாலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஓட்டுநா் பெரியண்ணன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.