அவதூறு விடியோக்களை நீக்காவிட்டால் வழக்கு தொடர்வேன்: ஏ. ஆர். ரஹ்மான்
தன் விவாகரத்து குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்புவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஏ. ஆர். ரஹ்மான் எச்சரித்துள்ளார்.
திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதி விவாகரத்து பெறவிருப்பதாக தனித்தனியாக அறிவித்ததும், இவர்களது தரப்பிலிருந்து வழக்குரைஞரின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் வெளியானது.
சினிமாத் துறையில் இருந்தாலும் பலரிடம் மேன்மையானவர் என்கிற பெயரைப் பெற்ற ரஹ்மானுக்கு விவாகரத்து என செய்தி வெளியானதிலிருந்து ரசிகர்கள் அதிர்ச்சியுடன் இருக்கின்றனர்.
சாய்ரா பானு பொதுவெளியில் அதிகம் தெரியாவிட்டாலும் சில நிகழ்வுகளில் ரஹ்மானுடன் இணைந்து மேடையேறியிருக்கிறார். இருவரின் பேச்சும் புரிதலும் ஆச்சரியப்பட வைத்திருக்கின்றன.
இதையும் படிக்க: வைரலாகும் ஏ. ஆர். ரஹ்மானின் ‘என்னை இழுக்குதடி’ பாடல்!
இச்சூழலில், இவர்கள் விவாகரத்து செய்வதாக அறிவித்ததிலிருந்து சமூக வலைதளங்களில் தேவையற்ற ஆதாரமில்லாத கருத்துகளும் பரவி வருகின்றன.
முக்கியமாக, ரஹ்மான் விவாகரத்து அறிவித்த நாளிலேயே அவரின் இசைக்குழுவைச் சேர்ந்த பெண் இசைக்கலைஞரும் தன் விவாகரத்தை அறிவித்தது சில சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்த நிலையில், ரஹ்மான் தரப்பிலிருந்து சட்ட ரீதியான நோட்டீஸ் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், “என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆதாரமற்ற வகையில் உண்மைக்கு புறம்பாக எழுதப்பட்ட கட்டுரைகள், விடியோக்களை வெளியிட்டவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவற்றை நீக்க வேண்டும். இல்லையென்றால் 2 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு தொடர்வேன். யூடியூப் உள்பட அனைத்து சமூக வலைதளங்களும் இது பொருந்தும்.” என தெரிவித்துள்ளார்.
இதனால், ஆதாரமற்ற விடியோக்களை வெளியிட்டவர்கள் அதனை நீக்கத் துவங்கியுள்ளனர்.