Anupama Parameswaran: "காட்டுப்பேச்சி நீ.. பாட்டுப்பேச்சி நீ!" - அனுபமா க்ளிக்ஸ்...
``அவரோடு வாழ முடியாது, காரணத்தை சொல்லமுடியாது'' திருமணமாகி 20 நிமிடத்தில் கணவனை பிரிந்த பெண்
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொன்னாலும், அந்தத் திருமண வாழ்க்கை சிலருக்கு நரக வாழ்க்கையாக அமைந்துவிடுகிறது. இதனால், திருமணமான சில மாதங்கள் அல்லது சில நாட்களிலேயே கூட விவாகரத்து செய்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண் திருமணமான ஒரே நாளில் தனது கணவனை விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள தியோரியா என்ற இடத்திற்கு அருகிலுள்ள பாலூனி என்ற பகுதியில் மளிகை கடை வைத்திருப்பவர் விஷால். அவருக்கு பூஜா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட தேதியில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் திருமண சடங்குகள் நடைபெற்றன. காலையில் தொடங்கி மாலை வரை திருமண சடங்குகள் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு பூஜா தனது கணவன் வீட்டிற்கு சென்றார்.

பூஜா, கணவன் வீட்டினரின் அனுமதியுடன் தனது அறைக்குள் சென்றார். அடுத்த 20 நிமிடங்களில் அந்த அறையிலிருந்து வெளியே வந்த பூஜா, "எனக்கு விஷாலுடன் வாழ முடியாது. நான் எனது பெற்றோர் வீட்டிற்கு செல்கிறேன். எனது பெற்றோருக்கு போன் செய்யுங்கள்," என்று கூறினார்.
இதைக் கேட்டவர்களில் ஆரம்பத்தில் பூஜா நகைச்சுவையாகச் சொல்கிறார் என நினைத்தனர். ஆனால் பூஜா தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள், வீட்டினர்கள் அந்தப் பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பூஜா விஷாலுடன் வாழ முடியாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து பூஜாவின் பெற்றோருக்கு போன் செய்து வரவழைத்தனர்.
அவர்களும் பூஜாவுடன் பேசிப் பார்த்தனர். ஆனால் பூஜா தனது முடிவில் உறுதியாகவே இருந்தார். “என்ன காரணத்திற்காக விஷாலுடன் வாழ மறுக்கிறாய்?” என்று உறவினர்கள் கேட்டனர். ஆனால் பூஜா அதற்கான காரணத்தை மட்டும் கடைசி வரை சொல்லவே இல்லை. “விஷாலுடன் வாழ மாட்டேன்” என்று மட்டும் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

இந்த பிரச்சனை ஊர் பஞ்சாயத்துக்கு சென்றது. பஞ்சாயத்து தலைவர்கள் கூடி இது குறித்து விவாதித்தனர். அவர்களும் பூஜாவிடம் “என்ன காரணத்திற்காக திருமண வாழ்க்கை வேண்டாம் என்று சொல்கிறாய்?” என்று கேட்டார்கள்.
அவர்களிடமும் பூஜா காரணத்தை சொல்லவில்லை. அதே சமயம், “விஷாலுடன் வாழ மாட்டேன்” என்று மட்டும் உறுதியாகச் சொன்னார்.
5 மணி நேரம் நடந்த பஞ்சாயத்திலும் எந்த வித தீர்வும் எட்டப்படாததால், வேறு வழியில்லாமல் இருவரையும் பஞ்சாயத்தார் பிரித்துவிட்டனர்.
இருவரும் மனஒத்துப் பிரிவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதோடு, இரு குடும்பமும் திருமணத்திற்கு கொடுத்த பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை திரும்ப வழங்கும்படி பஞ்சாயத்தார் கேட்டுக்கொண்டனர். மேலும், இருவரும் இனி வேறு யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பஞ்சாயத்தார் தெரிவித்தனர்.
பூஜா முதல் நாள் மாலை கணவன் வீட்டிற்கு சென்றார். மறுநாள் பஞ்சாயத்து தீர்ப்பிற்குப் பிறகு தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பினார். ஆனால் கடைசி வரை விஷால் வேண்டாம் என்று சொல்வதற்கான காரணத்தை மட்டும் சொல்லவில்லை.

இது குறித்து மணமகன் விஷால் கூறுகையில், “திருமணத்திற்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்வதில் எந்த விருப்பமும் காட்டவில்லை என சொல்ல முடியாது; சாதாரணமாகவே பேசினார். அவரது இந்த முடிவு இரு குடும்பங்களுக்கும் தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது. பூஜா மீது போலீசில் புகார் எதுவும் கொடுக்கப் போவதில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
இச்செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதை படித்த பலரும், ‘சேர்ந்து வாழ்ந்து வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தை அனுபவிப்பதை விட பிரிந்து விடுவது மேல்’ என்று கருத்து தெரிவித்துள்ளனர்.


















