காரைக்காலிலிருந்து கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை: ரயில்வே இணை அமைச்சா்
"அவர் சொல்லவில்லை என்றால் 10,000 ரன்கள் அடித்திருக்க மாட்டேன்" - சுவாரசியம் பகிரும் கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர்... இந்தப் பெயரைக் கேட்டதும் இக்கால இளைஞர்களுக்கு இவரை வெறும் கிரிக்கெட் வர்ணனையாளராகத்தான் தெரியும். ஆனால், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இன்டீஸ் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த ஒரு காலத்தில், மற்ற அணிகளெல்லாம் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை எதிர்கொள்ளத் திணறிக்கொண்டிருந்த சமயத்தில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஆளாக 10,000 ரன்களை அடித்தவர்தான் சுனில் கவாஸ்கர். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கபில்தேவ் தலைமையிலான அணியில் சீனியர் வீரராகவும் கவாஸ்கர் இருந்தார்.

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஆளாக 10,000 ரன்களைக் கடப்பதற்கு முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்தான் காரணமென்று கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார். ஸ்போர்ட்ஸ் ஊடக நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசியிருக்கும் கவாஸ்கர், ``டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் 10,000 ரன்களை எட்டுவதற்கான வாய்ப்பைப் பெற்றதற்கு ஒரே காரணம் இம்ரான் கான். டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு முன்பு (1986), இங்கிலாந்தில் அந்நாட்டுக்கெதிரான தொடரில் முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு நானும் இம்ரானும் ஒரு நண்பருடன் லண்டனிலுள்ள ஒரு இத்தாலிய உணவகத்துக்கு மதிய உணவு சாப்பிடச் சென்றோம்.
அப்போது, `இதுதான் என்னுடைய கடைசி தொடர். இந்தத் தொடருக்குப் பிறகு ஓய்வுபெறுவேன்' என்று இம்ரானிடம் கூறினேன். அப்போது, `உங்களால் அது முடியாது' என்று அவர் கூற, `என்னால் முடியாது என்று நீங்கள் எதைக் குறிக்கிறீர்கள். அது என்னுடைய விருப்பம்' என்றேன். அதற்கு, `இல்லை இல்லை, பாகிஸ்தான் அணி இந்தியா வருகிறது. நீங்கள் விளையாடும் இந்திய அணியை நான் வீழ்த்த விரும்புகிறேன். நீங்கள் இல்லாத இந்திய அணியை நான் வெல்ல விரும்பவில்லை' என்று இம்ரான் கூறினார்.

`ஆனால், பாகிஸ்தான் வரவில்லையே' என்று நான் கேட்க, `ஐசிசி மீட்டிங் நடக்கிறது. அடுத்த வாரம் நீங்கள் அறிவிப்பைப் பெறுவீர்கள்' என்று இம்ரான் சொன்னார். நானும், `அறிவிப்பு வந்தால் தொடர்ந்து விளையாடுவேன். இல்லையென்றால் அடுத்த டெஸ்ட் போட்டியோடு ஓய்வுபெறுவேன்' என்றேன்.
அவர் கூறியது போலவே அறிவிப்பும் வந்தது. நானும் தொடர்ந்து விளையாடினேன். நான் மட்டும் அப்போதே ஓய்வுபெற்றிருந்தால், 9,200 முதல் 9,300 ரன்களில் கரியரை முடித்திருப்பேன். பாகிஸ்தான் இந்தியா வந்ததாலும், அதற்கிடையில் இந்தியாவில் இரண்டு தொடர்கள் நடந்ததாலும் நான் 10,000 ரன்களைத் தொட்டேன்." என்று கூறினேன்.
1987-ல் பாகிஸ்தான், இந்தியா வந்து விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவில் ஓய்வுபெற்ற கவாஸ்கர், அந்தத் தொடரின் நான்காவது போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைத் தொட்டார். கடைசி போட்டியோடு, 10,122 டெஸ்ட் ரன்களுடன் தனது டெஸ்ட் கரியரை கவாஸ்கர் முடித்துக்கொண்டார். மேலும், அந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான்தான் தொடர் நாயகன் விருது வென்றார்.

பின்னாளில், கவாஸ்கரின் இந்தச் சாதனையை 2005-ல் மற்றொரு இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் முறியடித்தார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 15,921 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர்தான் இன்றும் முதலிடத்தில் இருக்கிறார்.