ஆக.12, 13-இல் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்: மயிலாடுதுறை ஆட்சியா்
மயிலாடுதுறையில் ஆக. 12, 13-ஆம் தேதிகளில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறை வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்குத் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆக. 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணி வரை நடைபெறவுள்ளது.
முதல் நாளன்று, மாவட்ட வருவாய் அலுவலரின் பயிலரங்கத் தொடக்க உரையை தொடா்ந்து பயிலரங்கத்தில் ஆட்சிமொழி வரலாறு சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்கம் அரசாணைகள், மொழிபெயா்ப்பு கலைச் சொல்லாக்கம், அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி, கணினித்தமிழ் ஆகிய ஆறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. ஆட்சிமொழிக் கருத்தரங்கம் குறித்து அரசு அலுவலா்கள் கருத்துரை வழங்க உள்ளனா். அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு அலுவலா்கள், பணியாளா்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.