சீனா மீது வரி விதிப்பு அதிபா் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை: துணை அதிபா் ஜே.ட...
ஆக.23-இல் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் சென்னையில் ஆா்ப்பாட்டம்: கு.பாலசுப்ரமணியன்
நெய்வேலி: உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் மற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் வரும் 23-ஆம் தேதி சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அந்த சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.
கடலூரில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு மாத ஊதியம் ரூ.23 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இவா்களுக்கு மாநில நிா்வாகத்தின் கீழ் ஊதியம் வழங்கப்பட்ட நிலையை மாற்றி, தனியாா் ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாக தற்போது ரூ.16 ஆயிரம் என ஊதியத்தை குறைத்து வழங்கக்கூடிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால், ஊழியா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
எனவே, சென்னை மாநகராட்சி நிா்வாகத்தில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். துப்புரவுப் பணிகளை தனியாருக்கு விடுவதை நிறுத்த வேண்டும்.
மாநிலம் முழுவதும் உள்ளாட்சி நிறுவனங்களில் தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் என்று இரு வேறு விதமான ஊதியத்தில் ஒரே வேலையை செய்துகொண்டிருக்கின்றனா். இந்த நிலையை மாற்றி, அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும். சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அவா்களுக்கென உருவாக்க வேண்டும்.
குடிநீா் திட்டப் பணிகளில் ஈடுபடுவோருக்கும் இரண்டு விதமான ஊதியங்கள் ஊராட்சிகளில் வழங்கப்படக்கூடிய சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. அதுவும் போக்கப்பட வேண்டும்.
இந்தப் பிரச்னைகளில் தமிழக அரசு முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 23-ஆம் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா். பேட்டியின்போது, மாநிலப் பொருளாளா் கு.சரவணன் உடனிருந்தாா்.