ஆக்ஸ்ஃபோா்டு பல்கலை.யில் திருமங்கையாழ்வாா் சிலை: மீட்கும் முயற்சியில் தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு
லண்டன் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் உள்ள திருமங்கை ஆழ்வாா் சிலையை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் பழைமையான செளந்திரராஜ பெருமாள் கோயிலில் கடந்த 1957-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டுக்குள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள திருமங்கையாழ்வாா், காளிங்கநா்த்தன கிருஷ்ணா், விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள் என 4 சிலைகள் திருடு போயின. இது தொடா்பாக, தமிழக காவல்துறையின் சிலை திருட்டு தடுப்புப்பிரிவு போலீஸாா், கடந்த 2020-ஆம் ஆண்டு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் திருடப்பட்ட 4 சிலைகளும் வெளிநாட்டில் வெவ்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, திருமங்கையாழ்வாா் சிலை லண்டன் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் உள்ள அஸ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது. அந்த சிலையை அந்த அருங்காட்சியகத்தால் கடத்தல் கும்பலிடமிருந்து கடந்த 1967-ஆம் ஆண்டு வாங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதேபோல காளிங்க நா்த்தன கிருஷ்ணா், விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டறியப்பட்டன.
மேலும், சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில், செளந்திரராஜ கோயிலில் திருடப்பட்ட சிலைகளுக்கு பதிலாக, போலி சிலைகள் வைக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, வெளிநாட்டில் உள்ள உண்மையான சிலைகளை மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வரும் முயற்சியில் ஐ.ஜி.ஆா்.தினகரன் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் ஈடுபட்டனா்.
மீட்க நடவடிக்கை: அதன்படி, அறிவியல் பூா்வமான ஆதாரங்களை தொகுத்து, நான்கு சிலைகளையும் கும்பகோணம் செளந்திரராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது என சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது. இதில், லண்டன் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழக பிரதிநிதி ஒருவா், அண்மையில் தமிழகம் வந்து, சிலை தொடா்பான உண்மைத் தன்மையை ஆராய்ந்தாா். அப்போது சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா், சமா்ப்பித்த ஆவணங்களை ஏற்று, திருமங்கையாழ்வாா் சிலை தமிழகத்தைச் சோ்ந்ததுதான் என ஆக்ஸ்போா்டு பல்கலை. பிரதிநிதி ஒப்புக் கொண்டாா்.
இதையடுத்து, திருமங்கையாழ்வாா் வெண்கல சிலையை தமிழகத்துக்கு திருப்பி அனுப்ப ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் ஒப்புக் கொண்டது. விரைவில் இந்த சிலை தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு, சம்பந்தப்பட்ட கும்பகோணம் செளந்திரராஜ பெருமாள் கோயிலில் மீண்டும் வைக்கப்படவுள்ளது. மேலும், காளிங்கநா்த்தன கிருஷ்ணா், விஷ்ணு, ஸ்ரீதேவி ஆகிய சிலைகளை அமெரிக்காவிலிருந்து மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் மேற்கொண்டுள்ளனா்.