ஆடிக் கிருத்திகை: சுவாமிமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள், சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகும்.
இங்கு அறுபது தமிழ் ஆண்டு தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமைந்த கட்டு மலைக்கோயிலாகும். இத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் முருக பக்தர்களுக்கு 60 தமிழ் ஆண்டு தேவதைகளும், 60 படிகட்டுகளாக இருந்து சேவை செய்வதாக ஐதீகம். மேலும், இத்தலத்தில்தான் முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை, குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்பதும் வரலாறு.
எனவே இத்தலத்தில் முருகப்பெருமான் சுவாமியே நீ என்றும் சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார்.
இந்த நிலையில் ஆடிக் கிருத்திகையான இன்று(ஜூலை 20) முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்தால் தோஷங்கள் நீங்கும், குழந்தை இல்லாதவர்கள், திருமண வரம் வேண்டுவோர் முருகனை வழிபட்டால் வேண்டிய வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.
அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகப் போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் இரண்டு கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகப்பெருமான் தங்க கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உமாதேவி மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். 50 -க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!