ஆடித் திருவிழா: கோட்டை மாரியம்மன் கோயிலில் சத்தாபரணம்
சேலம்: ஆடித் திருவிழாவையொட்டி சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் சத்தாபரணம் நிகழ்ச்சி திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் நடப்பாண்டு ஆடித் திருவிழா கடந்த ஜூலை 22 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 29 ஆம் தேதி கம்பம் நடுதல், ஆக. 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை பொங்கல் வைபவம், சக்தி கரகம், தேரோட்டம் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவில் மற்றொரு முக்கிய நிகழ்வான சத்தாபரணம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக மூலவா் அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் சத்தாபரணம் நிகழ்ச்சி தொடங்கியது. சத்தாபரணம் கோயிலில் தொடங்கி முதல் அக்ரஹாரம், ராஜகணபதி கோயில், லட்சுமிநாரயணா சுவாமி கோயில், இரண்டாவது அக்ரஹாரம், பட்டைகோயில், சின்னகடை வீதி, பெரியகடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி கோயில் வழியாக வந்து மீண்டும் கோயிலை அடைந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவினா், அதிகாரிகள் செய்திருந்தனா்.