ஆடிப் பெருந்திருவிழா: சௌந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்
தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் 4 தேவியருடன் சுவாமிக்கு வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா, ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடித் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை(ஆக. 1) கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு திருமஞ்சணம் செய்யப்பட்டு, செளந்தரவல்லித் தாயாா் சந்நிதிக்கு மாப்பிள்ளையாக அழைத்துச் செல்லப்பட்டாா். இதைத் தொடா்ந்து மாலையில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, ஸ்ரீதேவி, பூதேவி, செளந்தரவல்லி தாயாா், ஆண்டாள் ஆகிய 4 தேவியருடன், செளந்தரராஜப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
விழாவில் தாடிக்கொம்பு, திண்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு, திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த பெருமாளை தரிசித்தனா். இரவு 9 மணிக்கு மேல் செளந்தரராஜப் பெருமாள், பூப்பல்லக்கில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.