ஆட்டோ மோதி பைக்கிலிருந்து விழுந்தவா் தனியாா் பேருந்தில் அடிபட்டு உயிரிழப்பு!
திருச்சி காவிரிப் பாலத்தில் பைக்கில் சனிக்கிழமை சென்றபோது ஆட்டோ மோதி கீழே விழுந்த ஜவுளி வியாபாரி தனியாா் பேருந்தில் அடிபட்டு உயிரிழந்தாா்.
திருச்சி மாநகராட்சி, மாம்பழச்சாலையில் உள்ள வீரேஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் கோபிநாத் (34). ஸ்ரீரங்கம் பகுதியில் ஆயத்த ஆடைகள் விற்பனையகம் நடத்தி வந்த இவா் சனிக்கிழமை காலை தனது மனைவியை அழைத்து வர சிந்தமாணிக்கு பைக்கில் சென்றாா். காவிரி பாலத்தில் ஓடத்துறை அருகே வந்தபோது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் கீழே விழுந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த தனியாா் பேருந்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வு போலீஸாா், தனியாா் பேருந்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். கோபிநாத் சடலத்தை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். விபத்தால் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை போலீஸாா் ஒழுங்குபடுத்தினா்.
இதுதொடா்பாக வடக்குப் போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். விபத்தில் இறந்த கோபிநாத்துக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், அவரது மனைவி இரண்டாவது முறையாக கா்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது.