ஆன்லைன் செயலியில் ரூ.2,000 கடன்; மிரட்டி துன்புறுத்திய கும்பல்; திருமணமான 47 நாளில் இளைஞர் தற்கொலை!
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ஆன்லைன் கடன் செயலியில் ரூ.2,000 கடன் வாங்கிய 27 வயது இளைஞர், அந்தச் செயலியிலிருந்து வந்த துன்புறுத்தலால் திருமணமான 47 நாளில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
போலீஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, மீன்பிடி தொழிலைச் செய்பவரான இளைஞர் நரேந்திரன், வானிலை காரணமாக சில மாதங்களாக முன்பு மீன் பிடிக்கச் செல்லாதபோது, ஆன்லைன் கடன் செயலியில் ரூ. 2,000 கடன் வாங்கியிருக்கிறார்.
பின்னர், அந்த அசல் தொகையை மட்டும் நரேந்திரன் திருப்பிச் செலுத்தியிருக்கிறார். இருப்பினும், ஒரு பெரிய தொகையை வட்டியாகச் செலுத்துமாறு நரேந்திரனை அந்தக் கடன் செயலியைச் சேர்ந்தவர்கள் துன்புறுத்தத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், அவர்கள் கேட்ட பணத்தைத் தரமுடியாது என நரேந்திரன் கூறவே, அவர்கள் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர்.
இதற்கிடையில், கடந்த அக்டோபர் 20-ம் தேதி நரேந்திரனுக்கு திருமணம் நடந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, அந்த ஆன்லைன் கடன் செயலியைச் சேர்ந்தவர்கள் நரேந்தின் மற்றும் அவரின் மனைவியையும் பிளாக்மெயில் செய்து, அவர்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை ஆபாசமாகச் சித்திரித்து அவர்களின் நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கின்றனர்.
இதனால், மனமுடைந்த நரேந்திரன் இந்த துன்புறுத்தலைத் தாங்க முடியாமல் கடந்த சனிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர், நரேந்திரனின் குடும்பத்தினர் போலீஸில் இதுபற்றி புகாரளிக்கவே இந்த சம்பவம் தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...