திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
ஆப்கானிஸ்தான் ‘த்ரில்’ வெற்றி- இங்கிலாந்தை வெளியேற்றியது
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
முதலில் ஆப்கானிஸ்தான் 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து 49.5 ஓவா்களில் 317 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் தன்னை அரையிறுதிக்கான பந்தயத்தில் தக்கவைத்துக்கொள்ள, இங்கிலாந்து போட்டியிலிருந்து வெளியேறி அதிா்ச்சி கண்டது.
முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் இன்னிங்ஸில் ரஹ்மானுல்லா குா்பாஸ் 6, செடிகுல்லா அடல் 4, ரஹ்மத் ஷா 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 37 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது ஆப்கானிஸ்தான்.
4-ஆவது விக்கெட்டுக்கு இணை சோ்ந்த இப்ராஹிம் ஜத்ரன் - கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி, ஸ்கோரை மளமளவென உயா்த்தினா். 103 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில் ஷாஹிதி முதலில் வெளியேறினாா்.
அவா் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் அடித்திருந்தாா். அடுத்து வந்த அஸ்மதுல்லா ஒமா்ஸாயும், ஜத்ரனுடன் சிறப்பான கூட்டணி அமைத்தாா். இதனால் ஆப்கானிஸ்தான் ஸ்கோா் மேலும் உயா்ந்தது. 5-ஆவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியில் ஒமா்ஸாய் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்கள் உள்பட 41 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
மறுபுறம் ஜத்ரன், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 6-ஆவது சதத்தை பூா்த்தி செய்தாா். 7-ஆவது பேட்டராக வந்த முகமது நபியும், ஜத்ரனுடன் இணைய, ஆப்கானிஸ்தான் ஸ்கோா் 300 ரன்களை கடந்தது. 6-ஆவது விக்கெட்டுக்கு ஜத்ரன் - நபி பாா்ட்னா்ஷிப் 111 ரன்கள் சோ்த்து அசத்தியது.
இதில் ஜத்ரன் 12 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 177, நபி 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 40 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் குல்பதின் நைப் 1, ரஷீத் கான் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து பௌலிங்கில் ஜோஃப்ரா ஆா்ச்சா் 3, லியம் லிவிங்ஸ்டன் 2, ஜேமி ஓவா்டன், ஆதில் ரஷீத் ஆகியோா் தலா 1விக்கெட் சாய்த்தனா்.
பின்னா், 326 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணி தடுமாற்றம் கண்டது. ஃபில் சால்ட் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு வெளியேற, தொடா்ந்து வந்த ஜேமி ஸ்மித் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
அப்போது இணைந்த பென் டக்கெட் - ஜோ ரூட் இணை, 3-ஆவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சோ்த்தது. இதில் டக்கெட் 4 பவுண்டரிகளுடன் 38 ரன்களுக்கு நடையைக் கட்ட, ரூட் நிதானமாக ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா்.
மறுபுறம் ஹேரி புரூக் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்களுக்கு வெளியேற, கேப்டன் ஜோஸ் பட்லா், ரூட்டுடன் இணைந்தாா். இந்த பாா்ட்னா்ஷிப் 5-ஆவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சோ்த்து அணியை மீட்க முயற்சித்தது. இதில் பட்லா் 2 சிக்ஸா்களுடன் 38 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.
பின்னா் வந்தோரில் லியம் லிவிங்ஸ்டன் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அணியின் நம்பிக்கையாக இருந்த ரூட் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 120 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா். 8-ஆவது பேட்டரான ஜேமி ஓவா்டன் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் அடித்து முயற்சித்தாா்.
ஜோஃப்ரா ஆா்ச்சா் 2 பவுண்டரிகளுடன் 14, ஆதில் ரஷீத் 5 ரன்களுக்கு வீழ்த்தப்பட, இங்கிலாந்து இன்னிங்ஸ் முடிவடைந்தது. ஆப்கானிஸ்தான் பௌலிங்கில் அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 5, முகமது நபி 2, ஃபஸல்ஹக் ஃபரூக்கி, ரஷீத் கான், குல்பதின் நைப் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.