பெண் டிஐஜியிடம் ‘டிஜிட்டல் அரஸ்ட்’ மோசடிக்கு முயற்சி சைபா் குற்றப்பிரிவு விசாரண...
ஆம்பூர்: தலை இல்லாமல் கிடந்த மாடு; மண் திருட்டு குறித்து புகாரளித்ததால் அட்டூழியமா? போலீஸ் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள ரெட்டிமாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் யுவராஜ். தற்போது இவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
ஆம்பூர் அருகேயுள்ள வடபுதுப்பட்டு கிராமத்தில், யுவராஜிக்குச் சொந்தமாக 20 ஏக்கர் நிலம் இருக்கிறது. அவற்றில், 6 பசுமாடுகளையும் பணியாளர்கள் மூலமாகப் பராமரித்து வருகிறார் வழக்கறிஞர் யுவராஜ். அதில், ஒரு பசுமாடு 6 மாத சினையாக இருந்தது. இவை அனைத்தும் 20 ஏக்கர் வயல்வெளியிலேயே மேய்ச்சலுக்கு விடப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (நவம்பர் 6) மாலை 6 மணிக்கு மேய்ச்சலிலிருந்த மாடுகளை மணி என்கிற பணியாளர் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
இன்று (நவம்பர் 7) காலை, பணியாளர் வந்து பார்த்தபோது, அந்த சினை பசுமாடு மட்டும் தலை இல்லாமல் இறந்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணி, அருகிலுள்ள காப்புக்காட்டிலிருந்து சிறுத்தை போன்ற மிருகங்கள் ஏதேனும் வயல்வெளிக்குள் புகுந்து வேட்டையாடிக் கொன்றிருக்கலாம் என்று சந்தேகப்பட்டிருக்கிறார்.
அப்படியே இருந்தாலும், உயிரிழந்த மாட்டின் கால்கள், உடல் பகுதிகளில் வேறு எங்கேயும் சிறுக் காயம்கூட இல்லாதது எப்படி என்கிற சந்தேகமும் மணிக்கு வந்திருக்கிறது. சுற்றித் தேடிப் பார்த்தபோது, மாட்டின் தலைப் பகுதி கிடைக்கவில்லை. கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் மாட்டின் கழுத்தைச் சரியான அளவில் வெட்டி தலையை மட்டும் தூக்கிச் சென்றுள்ளார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட மணி, உடனடியாகச் சென்னையிலுள்ள மாட்டின் உரிமையாளர் யுவராஜிக்கு தொலைப்பேசி மூலம் தகவலைத் தெரியப்படுத்தினார்.
தலைத் துண்டிக்கப்பட்ட பசுமாட்டின் புகைப்படங்களையும் செல்போனில் எடுத்து உரிமையாளருக்கு அனுப்பி வைத்தார். மர்ம ஆசாமிகள் மூலமாக இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டிருப்பதை உறுதி செய்துகொண்ட மாட்டின் உரிமையாளரான யுவராஜ், இது குறித்து தொலைப்பேசி மூலமாக ஆம்பூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளரையும், எஸ்.ஐ-யையும் தொடர்புகொண்டு தனது புகாரைப் பதிவு செய்தார். இதையடுத்து, காவல்துறையினர் விசாரணையில் இறங்கி, மர்ம ஆசாமிகளைத் தேடி வருகின்றனர்.
இது குறித்து, நம்மிடம் பேசிய மாட்டின் உரிமையாளர் யுவராஜ், "நான் அடிக்கடி ஊர்ப் பக்கம் வந்து என்னுடைய நிலத்தையும், மாடுகளையும் பார்த்துவிட்டுச் செல்கிறேன். என்னுடைய நிலத்தைச் சுற்றிக் காப்புக்காடுகளும் இருக்கின்றன.
காப்புக்காட்டிலிருந்து மிருகங்கள் உள்ளே புகுந்து இதுவரை தொந்தரவு செய்ததுக் கிடையாது. என்னுடைய பசுமாட்டை மர்ம ஆசாமிகள் கொன்று தலையை எடுத்து சென்றதற்கு மண் கடத்தல் விவகாரமாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். என்னுடைய நிலத்தின் அருகில் சில சமூக விரோதிகள் டிப்பர் லாரிகள் மூலமாக மண் கடத்தலில் ஈடுபடுகின்றனர். அதைத் தடுக்க கனிமவளத்துறையில் புகார் சொல்லி வந்தேன். இதனால் என்னை அச்சுறுத்தும் வகையில் மண் கடத்தல் கும்பல் என்னுடைய பசுமாட்டைக் கொன்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆம்பூர் டி.எஸ்.பி-யிடமும் பேசினேன். `எஃப்.ஐ.ஆர் போட்டு உடனே நடவடிக்கை எடுக்கிறேன்’ எனச் சொல்லியிருக்கிறார். யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்றார் கொதிப்போடு.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88