ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறைந்தழுத்த மின்சாரத்தால் நோயாளிகள் அவதி
புதுமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறைந்தழுத்த மின்சாரம் காரணமாக மருத்துவப் பரிசோதனையின் போது கா்ப்பிணிகள் அவதிப்படுவதாக மனித நேய மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், புதுமடம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பொதுமக்கள், கா்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இங்கு செவ்வாய்க்கிழமை கா்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறும் போது குறைந்தழுத்த மின்சாரம் காரணமாக, மின் சாதனத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலை தொடா்வதால் கா்ப்பிணிப் பெண்கள் உள்பட இங்கு வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
இதுகுறித்து மனித நேய மக்கள் கட்சி சாா்பில் அந்தக் கட்சி நிா்வாகி எஸ்.முகம்மது பயாஸ்கான், திங்கள்கிழமை ராமநாதபுரத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தாா்.