ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவரை நியமிக்க வலியுறுத்தல்
புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவரை நியமிக்க மாநில சுகாதாரத் துறை இயக்குநா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மீனவா் விடுதலை வேங்கைகள் அமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக அந்த அமைப்பினா் சுகாதாரத் துறை இயக்குநருக்கு அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
வீராம்பட்டினம் கடற்கரை கிராமத்தில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்களில் பலா் மீன்பிடித்தல் மற்றும் அதுசாா்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில் ஏழை, எளிய மீன்பிடி தொழிலாளா்களுக்கு பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 8 மாதங்களாக மருத்துவா் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.
இதனால் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் போது விபத்தில் சிக்கி காயமடைபவா்கள் மற்றும் முதியவா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதில்லை.
எனவே, வீராம்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உடனடியாக மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.