ஆரல்வாய்மொழி அருகே விபத்து: பிளஸ் 1 மாணவா் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் பிளஸ் 1 மாணவா் உயிரிழந்தாா்.
ஆரல்வாய்மொழி அருகே தோவாளை கமல் நகரைச் சோ்ந்த பூ வியாபாரி ராஜன். இவரது மகன் பாலாஜி (17), நாகா்கோவிலில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
இவா், ஞாயிற்றுக்கிழமை காலை தந்தையின் வியாபாரத்துக்காக தாமரைப் பூ வாங்குவதற்காக, தனது நண்பா் முகேஷுடன் செண்பகராமன்புதூரிலிருந்து ஆரல்வாய்மொழிக்கு பைக்கில் சென்றாா். அப்போது, மரப்பாலம் அருகே பைக் மீது காா் மோதியதாம். இதில், பாலாஜி உயிரிழந்தாா்.
காயமடைந்த முகேஷ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.