ஆர்சிபி கேப்டனா? மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவேன்: ரஜத் படிதார் நம்பிக்கை!
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பை உருவாக்குவேன் எனக் கூறியுள்ளார்.
சையத் முஷ்டக் அலி டி20 தொடரில் மத்தியப் பிரதேச அணியை ரஜத் படிதார் தலைமை ஏற்று நடத்தி வருகிறார். தற்போது, ம.பி.அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
நாளை (டிச.15) இறுதிப் போட்டியில் மும்பையுடன் ரஜத் படிதார் தலைமையில் ம.பி. அணி மோதுகிறது.
இங்கிலாந்துடன் இந்திய அணியில் விளையாடிய படிதார் 63 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், சையத் முஷ்டக் அலி தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் ரஜத் படிதார் கூறியதாவது:
இந்திய அணியில் மீண்டும் விளையாடுவேன்
டெஸ்ட் அணியில் விளையாடுவது பிடிக்கும். ஆனால், நான் அந்த வாய்ப்பை இழந்தது சில நேரங்களில் வருத்தமளிக்கிறது. சில நேரங்கள் நாம் நினைத்ததுபோல் நடக்காது. அதனால் பரவாயில்லை.
தோல்வியை ஏற்பதுதான் சிறந்த வழி. கிரிக்கெட்டில் தோல்வி என்பது இருக்கும். அதனால், அதை எதிர்கொண்டு அதில் இருந்து கற்று, முன்னேற வேண்டும். அதுவும் விளையாட்டின் ஒரு பகுதி.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அதே பாணியை கைக்கொள்கிறேன். என்னுடைய மந்திரம் ஒரு நேரத்தில் ஒரு பந்து மட்டுமே. எதிரணி மீது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பெரிய ரன்கள் அடிக்க முயற்சிப்பதில்லை.
இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை மீண்டும் உருவாக்குவேன்.
ஆர்சிபி கேப்டனா?
ஆர்சிபிக்காக விளையாடுவது பிடிக்கும். என்னை தக்கவைத்தது மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்துள்ளது. ஆர்சிபியை வழிநடத்த வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செய்வேன். ஆனால், அது அவர்களின் கைகளில் இருக்கிறது.
ம.பி. கேப்டன்சி (தலைமைப் பண்பு) உத்திகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன். அதிகமாக கற்றும் இருக்கிறேன். எனது பயிற்சியாளர் சந்திரகாத் பண்டிட்டிடம் இருந்து கற்று வருகிறேன். அனிவரும் அறிவர் அவர்தான் இந்தியாவின் சிறந்த பயிற்சியாளர் என்றார்.
5 ரஞ்சி கோப்பை போட்டியில் 427 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 53.37 ஆக இருக்கிறது. சையத் முஷ்டக் அலி தொடரில் 347 ரன்கள் அடித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 182.63ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.