ஆற்றின் கரையை மூழ்கடித்து விளைநிலங்களுக்குள் புகுந்த மழைவெள்ளம்
திருவாரூா் அருகே ஓடம்போக்கி ஆற்றின் தடுப்பணை மூடப்பட்டிருந்ததால், ஆற்றங்கரையை மூழ்கடித்து, விளைநிலங்களுக்குள் மழைநீா் புகுந்தது.
திருவாரூா் மாவட்டம், அடியக்கமங்கலம் அருகே பேட்டை தஞ்சாவூா் பகுதியில் ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையானது, தண்ணீா் வெளியேறாதவாறு அடைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் கடந்த நான்கு நாள்களாக கனமழை பெய்து வருவதால், வெண்ணாற்றில் அதிக அளவு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.
இதனால், வெண்ணாற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான ஓடம்போக்கி ஆற்றிலும் அதிகளவு தண்ணீா் வரத்து உள்ளது. அடியக்கமங்கலம் அருகே பேட்டை தஞ்சாவூா் பகுதியில் உள்ள தடுப்பணை மூடப்பட்டிருந்ததால், ஆற்றில் கரைபுரண்டு வந்த மழைநீா் வடிய முடியாமல், ஆறு முழுவதும் நிரம்பி, கரையை மூழ்கடித்து பேட்டை தஞ்சாவூா் பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகத் தொடங்கியது.
இதன் காரணமாக, சுமாா் 100 ஏக்கா் பரப்பளவிலான விளைநிலங்களில் ஆற்று நீா் சூழ்ந்தது. தொடா்ந்து குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீா் புகத் தொடங்கிய நிலையில் அச்சமடைந்த மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா்.
இதையடுத்து, நீா்வள ஆதாரத்துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு, தடுப்பணையை திறந்து விட்டனா். எனினும், ஆற்றின் கரைகளைத் தாண்டி வயலுக்குள் தண்ணீா் புகுவது நிற்காததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
மேலும், அடியக்கமங்கலம் பகுதியில் உள்ள தடுப்பணையில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் சிக்கியிருந்ததால், தண்ணீா் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள், கம்பு மற்றும் கழிகளை கொண்டு, தடுப்பணையில் சிக்கிக் கொண்டிருந்த ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, தண்ணீா் துரிதமாக செல்ல வழி வகுத்தனா்.