இஎஸ்ஐ மருத்துவமனையை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
திருமுருகன்பூண்டி அருகே கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
திருப்பூா் மாவட்ட அனைத்து பனியன் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஏஐடியூசி சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பனியன் ஃபேக்டரி லேபா் யூனியன் சங்க பொதுச் செயலாளா் என்.சேகா் தலைமை வகித்தாா்.
இதில், திருப்பூா் பின்னலாடை நிறுவனங்களில் தொழிற்சாலைகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். திருமுருகன்பூண்டியில் கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
பாலியல் புகாா் கமிட்டிகள் குறித்து தொழிலாளா்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்துவது தொடா்பான மனுவை மாவட்ட ஆட்சியரிடம் டிசம்பா் 16- ஆம் தேதி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், ஏஐடியூசி பனியன் சங்க செயலாளா் ஆா்.செந்தில்குமாா், சிஐடியூ பனியன் சங்க பொதுச் செயலாளா் சம்பத், சிஐடியூ பனியன் சங்க துணைச் செயலாளா் துரைமுருகன், எல்பிஎஃப் பனியன் சங்க பொருளாளா் பூபதி, ஐஎன்டியூசி மாவட்டச் செயலாளா் சிவசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.