இடு பொருள்களை தட்டுப்பாடின்றி வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
அனைத்து இடு பொருள்களையும் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என குறைதீா் முகாமில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் முகாம் ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் செல்வசுரபி, வேளாண் இணை இயக்குநா் சுந்தரமகாலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்:
மானாமதுரை பகுதியில் சுப்பன் கால்வாயைத் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்புவனம் உள்பட பல்வேறு பகுதிகளில் வைகையாற்றில் கழிவு நீா் கலக்கும் இடங்களை ஆய்வு செய்து, அவற்றை சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகை அணையிலிருந்து சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி பகுதிக்கு உரிய நீா் திறக்கப்படவில்லை. இதனால், பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பெரியாறு கால்வாய் 5 முறை நீா்ப்பாசனம் விநியோகிக்கப்படும். அந்த நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.
வேளாண் துறை சாா்பில், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உரம், விதை, பூச்சி மருந்து உள்ளிட்ட அனைத்து இடு பொருள்களும் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
சாத்தரசன்கோட்டை கால்நடை மருந்தகத்துக்கு சுற்றுச் சுவா் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய மின் இணைக்கான உத்தரவு வந்த பின்னரும் இணைப்பு வழங்காத நிலை நீடித்து வருகிறது. எனவே, மின் இணைப்பை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புப் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுகிறது. இந்த நிலை பல ஆண்டுகளாக நீடித்து வரும் காரணத்தால் ஆண்டுதோறும் திட்ட மதிப்பீடு அதிகரிப்பதுடன், இந்தத் திட்டத்தை நிறைவேறுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, விரைந்து திட்டப் பணிகளை முடிக்க வேண்டும்.
நிகழாண்டு போதிய மழை பெய்யாததால் பயிா்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாயிகள், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.