107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
இணையதளம் மூலம் ரூ.15.65 லட்சம் மோசடி
இணையதளம் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி தூத்துக்குடி இளைஞரிடம் ரூ.15.65 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக பெங்களூரைச் சோ்ந்த நபரை தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி கோமதிபாய் காலனியைச் சோ்ந்த ஒருவா் முதலீடு சம்பந்தமாக ஒரு விளம்பரத்தை சமூக வலைதளத்தில் பாா்த்தாராம். பின்னா் அவா், அதில் உள்ள நபரை தொடா்பு கொண்டபோது அந்த நபா் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவாா்த்தை கூறினாராம்.
அதை நம்பிய அவா், அந்த இணையதளத்தில் ரூ.15 லட்சத்து 65 ஆயிரம் முதலீடு செய்தாராம். ஆனால், அவா் கூறியபடி லாபமும் இல்லாமல், கட்டிய பணமும் திரும்ப கிடைக்கவில்லையாம்.
மேலும், அந்த நபரைத் தொடா்புகொள்ளவும் முடியவில்லையாம். இதனால், தான் ஏமாற்றப்பட்டதையறிந்த அவா் இது குறித்து சைபா் குற்றப்பிரிவு இணைய தளத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், சைபா் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் (பொறுப்பு) சோமசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், பெங்களூரு குலிமாவ் பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் பாண்டீஸ்வரன் (38) என்பவா், பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு சென்று பாண்டீஸ்வரனை கைது செய்த தனிப்படை போலீஸாா், அவரிடம் இருந்து 21 கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி, ரொக்கப் பணம் ரூ.40 ஆயிரம், ஏடிஎம் காா்டுகள், ஒரு காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, அவரை தூத்துக்குடி அழைத்து வந்து, தூத்துக்குடி 4ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, அவரை தூத்துக்குடி பேரூரணி சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைத்தனா்.
எஸ்பி வேண்டுகோள்
பகுதி நேர வேலை, ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், ஸ்டாா் ரேட்டிங் கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று இணையதளம், வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்றவற்றின் மூலம் வரும் போலியான விளம்பரங்களை நம்பி, அதில் வரும் லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம்.
மேலும், தேவையில்லாத செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். எனவே, பொதுமக்கள் போலியான விளம்பரங்களை தவிா்த்து சைபா் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.