மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
இந்தக் குளிா்காலத்தில் தலைநகரில் இதுவரை இல்லாத குளிரான நாள் பதிவு
தேசியத் தலைநகா் தில்லி புதன்கிழமை இந்த குளிா்காலத்தில் இதுவரை இல்லாத குறைந்தபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை 8 டிகிரி செல்சியஸாக பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை, புதன்கிழமை 4.9 டிகிரி செல்சியஸாக குறைந்தது.
‘தில்லியின் முதன்மை வானிலை ஆய்வு மையமான சஃப்தா்ஜங்கில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 4.9 டிகிரி செல்சியஸ் இந்த குளிா்காலத்தின் மிகக் குறைந்த வெப்பநிலையாகும். கடந்த ஆண்டும் டிச.15-ஆம் தேதி அதே குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியது. புதனன்று குறைந்தபட்ச் வெப்பநிலை இயல்புநிலையில் 4.7 டிகிரி குறைந்து 4.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வானிலை ஆய்வு நிலையத்தின் மீது எப்போதும் இல்லாத குறைந்தபட்ச வெப்பநிலை 0.0 டிச. 27, 1930 அன்று பதிவாகியதாக அது மேலும் கூறியது.
புதனன்று சஃப்தா்ஜங்கில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்புநிலையில் 1.8 டிகிரி குறைந்து 23 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 64 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 39 சதவீதமாகவும் இருந்தது.
இதற்கிடையில், புதன்கிழமை காலை 8 மணிக்கு ஒட்டுமொத்தக் காற்று தரக் குறியீடு 207 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. இது செவ்வாய்க்கிழமை 223 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது.
தில்லியில் உள்ள 39 கண்காணிப்பு நிலையங்களில், ராமகிருஷ்ணாபுரம் மட்டுமே ‘கடுமை’ பிரிவில் காற்றின் தரத்தை பதிவு செய்துள்ளது. இருபத்தி மூன்று நிலையங்கள் ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்தன. மீதமுள்ள நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு ’மிதமான’ பிரிவில் இருந்தது என்று சமீா் செயலி கூறுகிறது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (டிச.12) அன்று பிரதான மேற்பரப்பு காற்று வடமேற்கு திசையில் இருந்து காலை நேரத்தில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். காலையில் மூடுபனி இருக்கும். பிற்பகலில் காற்றின் வேகம் வடமேற்கு திசையில் இருந்து காற்றின் வேகம் மணிக்கு 16 கி.மீட்டராக அதிகரிக்கும். அது மாலை மற்றும் இரவு நேரங்களில் வடேமற்கு திசையில் இருந்து காற்றின் வேகம் 8 கி.மீட்டராக குறையும். மாலை மற்றும் இரவில் பனிமூட்டம் இருக்கும். பகல் நேரத்தில் வானம் தெளிவாகக் காணப்படும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தலைநகரில் குளிா் அலைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளது.