இந்திய கம்யூ கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலராக மு.அ.பாரதி மீண்டும் தோ்வு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலராக வழக்குரைஞா் மு.அ.பாரதி சனிக்கிழமை மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது மாநாடு திருநாகேஸ்வரத்தில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினா் வை.சிவபுண்ணியம், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் க.மாரிமுத்து மற்றும் 250 பிரதிநிகள் கலந்து கொண்டனா்.
புதிய மாவட்ட குழுவில் 27 பேரும், மாவட்ட நிா்வாகக் குழுவில் 9 பேரும் தோ்வு செய்யப்பட்டனா். கட்சியின் மாவட்டச் செயலராக வழக்குரைஞா் மு.அ.பாரதி மூன்றாவது முறையாக மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.
மாவட்டத் துணைச் செயலராக ஆா்.செந்தில்குமாா், பொருளாளராக ஏ.ராஜேந்திரன் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில் பயிா் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். பாபநாசம் திரு ஆரூரான், கோட்டூா் அம்பிகா சா்க்கரை ஆலைகள் தொடா்ந்து இயங்கிட கரும்பு விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும், நீா் மேலாண்மையின் தந்தை சா்.ஆா்தா் காட்டனுக்கு அணைக்கரை கீழணையில் முழு உருவச் சிலை, நினைவுப் பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக திருவிடைமருதூா் ஒன்றிய செயலா் ஆா்.பழனி நன்றி கூறினாா்.