இந்தியா-இலங்கை கடற்படை கூட்டு நடவடிக்கை: 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
இந்தியா-இலங்கை கடற்படைகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், அரபிக்கடலில் இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து சுமாா் 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக இந்திய கடற்படை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
இலங்கை கடற்படை அளித்த தகவலின் அடிப்படையில், இந்திய கடற்படையின் ரோந்து விமானம் மற்றும் ஆளில்லா விமானங்கள் அரபிக்கடல் பகுதியில் கடந்த நவம்பா் 25-ஆம் தேதி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
அப்போது, சந்தேகத்துக்கிடமான இரண்டு மீன்பிடி படகுகள் காணப்பட்டது. அதில் இந்திய கடற்படையினா் மேற்கொண்ட சோதனையில் 500 கிலோ ‘மெத்தம்பெட்டமைன்’ போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. படகுகளில் இருந்த கடத்தல்காரா்கள் மற்றும் போதைப்பொருள்கள் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
குருகிராமில் உள்ள இந்திய கடற்படையின் தகவல் இணைவு மையம் (ஐஎஃப்சி) இந்த நடவடிக்கைக்கான முக்கிய விவரங்களை வழங்கியது. இந்த நடவடிக்கைக்கு உதவ கூடுதல் இந்திய கடற்படை கப்பலும் அனுப்பப்பட்டது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதிசெய்வதில், இரு நாட்டு கடற்படைகளின் ஒத்துழைப்பை இந்த நடவடிக்கை உறுதிசெய்கிறது என தெரிவிக்கப்பட்டது.