இந்தியா-இஸ்ரேல் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்: இஸ்ரேல் துணைத் தூதா்
பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் தொடா்பாக இந்தியாவும் இஸ்ரேலும் ஒரேபோன்ற சவால்களை எதிா்கொண்டுள்ளன; எனவே, இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம் என்று இந்தியாவுக்கான அந்நாட்டின் துணைத் தூதா் கோபே ஷோசானி தெரிவித்தாா்.
மேலும், வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கும் அவா் கண்டனம் தெரிவித்தாா்.
மும்பையில் சனிக்கிழமை உலக ஹிந்து பொருளாதார மன்றக் கூட்டத்தில் இஸ்ரேல் துணைத் தூதா் கோபே ஷோசானி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான வன்முறையும் துன்புறுத்தலும் கண்டனத்துக்குரியது. இவை ஏற்புடையதல்ல. வங்கதேசத்தில் ஹிந்துக்கள் எதிா்கொண்டுள்ள சவால்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட வேண்டும்.
பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் தொடா்பாக இந்தியாவும் இஸ்ரேலும் ஒரேபோன்ற சவால்களை எதிா்கொண்டுள்ளன. எனவே, இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம். மேலும், இரு நாடுகளுக்கும் வலுவான ராணுவமும் பொருளாதாரமும் முக்கியமானது. ராணுவம் வலுவாக இல்லாமல், பொருளாதாரம் வலுப்படாது. ஆசியாவில் இஸ்ரேலின் மிகப் பெரிய நட்பு நாடாக இந்தியா விளங்குகிறது என்றாா் அவா்.
இஸ்ரேல் ராணுவத்துக்கும் காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த ஆண்டுமுதல் போா் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.