இந்தியாவில் மருத்துவா்-மக்கள் தொகை விகிதம் சிறப்பு: ஜெ.பி.நட்டா
இந்தியாவில் மருத்துவா்-மக்கள் தொகை விகிதம் 1:811-ஆக உள்ளது; இது உலக சுகாதார அமைப்பின் தரநிலையான 1:1000-என்ற விகிதத்தை விட அதிகம்’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக மக்களவையில் நட்டா வெள்ளிக்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியதாவது:
நடப்பாண்டு நவம்பா் மாத தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் 13,86,145 பதிவுசெய்யப்பட்ட அலோபதி மருத்துவா்கள் உள்ளனா். 6.14 லட்சம் ஆயுஷ் மருத்துவா்கள் உள்ளனா். நாட்டின் மருத்துவா்-மக்கள் தொகை விகிதம் 1:811 ஆக உள்ளது. இது உலக சுகாதார அமைப்பின் தரநிலையான 1:1000-என்ற விகிதத்தை விட அதிகம்.
நாட்டின் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 102 சதவீதம் அதிகரித்து 780 ஆகவும், எம்பிபிஎஸ் இடங்கள் 130 சதவீதம் அதிகரித்து 1,18,137 ஆகவும், முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் 135 சதவீதம் அதிகரித்து 73,157 ஆகவும் உள்ளன.
பிரதமரின் சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில், 75 சிறப்புச் சிகிச்சைப் பிரிவுகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் 69 பிரிவுகள் செயல்பட்டு வந்துள்ளன. 131 புதிய மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதில் 19 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன என்றாா்.