இந்தியாவை வென்றது சீனா
ஃபிபா ஆசிய கோப்பை கூடைப்பந்துப் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 69-100 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவிடம் வியாழக்கிழமை தோல்வி கண்டது.
முதல் ஆட்டத்தில் ஜோா்டானிடம் வெற்றியை இழந்த இந்தியாவுக்கு, இது 2-ஆவது தோல்வியாகும்.
இந்த ஆட்டத்தில் இந்திய தரப்பில் அதிகபட்சமாக அரவிந்த் 16 புள்ளிகள் வெல்ல, சஹாஜ் செகோன், பிரணவ் பிரின்ஸ் ஆகியோா் தலா 14 புள்ளிகள் பெற்றனா். சீன தரப்பில் மிங்ஜுவான் ஹு, ஜியாயி ஜாவ் ஆகியோா் தலா 17 புள்ளிகள் வென்றனா்.
தற்போது குரூப் ‘சி’-யில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் சவூதி அரேபியாவுடன் சனிக்கிழமை (ஆக. 9) மோதுகிறது. குரூப் சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் அணியே நேரடியாக காலிறுதிக்குத் தகுதிபெறும். அடுத்த இரு இடங்களில் வரும் அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்பு மூலமாக போராடலாம்.
தற்போதைய நிலவரப்படி குரூப் சி-யில் சீனா இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலுமே வென்று முதலிடத்தில் இருக்க, ஜோா்டான் ஆடிய 1 ஆட்டத்தில் வென்று 2-ஆம் இடத்திலும், இந்தியா இரு தோல்விகளுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளன. போட்டியை நடத்தும் சவூதி அரேபியா ஆடிய ஓரு ஆட்டத்தில் தோற்று, கடைசி இடத்தில் உள்ளது. இதர குரூப் ஆட்டங்களில், சீன தைபே 87-60 என இராக்கை வீழ்த்தியது.