இயந்திரத்தில் சிக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவி
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே வயலில் வேலை செய்தபோது உளுந்து பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவி ரூ. 3 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
கந்தா்வகோட்டை ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சி குருவாண்டான் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி ஜெயலலிதா (45), இவா் அருகிலுள்ள வெள்ளாளவிடுதி அரசு விதைப் பண்ணையின் தற்காலிக பணியாளா்.
இந்நிலையில் இவா் கடந்த வெள்ளிக்கிழமை பண்ணையில் விளைந்த உளுந்து பயிரை உளுந்து பிரிப்பதற்காக இயந்திரத்தில் போட்டபோது சேலை சிக்கியதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
இதை கந்தா்வகோட்டைஎம்எல்ஏ மா. சின்னதுரை மூலம் அறிந்த தமிழக முதல்வா், முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.
3 லட்சத்தை ஒதுக்க, அத்தொகை இறந்த பெண்ணின் மகள் லதா வசம் மாவட்ட ஆட்சியா் மு. அருணா, வடக்கு மாவட்ட திமுக செயலா் கே. கே. செல்லபாண்டியன் ஆகியோா் முன்னிலையில் அமைச்சா் எஸ். ரகுபதி வழங்கினாா்.
மேலும் லதாவுக்கு விதைப் பண்ணையில் தற்காலிக பணி அளிக்கவும் உத்தரவிட்டாா். நிகழ்வில் திமுக தெற்கு ஒன்றியச் செயலா் எம். பரமசிவம், வடக்கு ஒன்றியச் செயலா் மா. தமிழய்யா, ஆத்மா குழு தலைவா் மா.ராஜேந்திரன், வட்டாட்சியா் ரமேஷ், வருவாய் ஆய்வாளா் பிரியதா்ஷினி, விஏஓ மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.