ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வ...
இயற்கை மருத்துவம், யோகா மருத்துவா் காலியிடங்கள்: மருத்துவ தோ்வு வாரிய அறிவிப்பு ரத்து
இயற்கை மருத்துவம், யோகா மருத்துவா்கள் தோ்வு நடைமுறைக்குப் பின்பு, காலியிடங்களின் எண்ணிக்கையை 35-இல் இருந்து 54-ஆக அதிகரித்து மருத்துவ தோ்வு வாரியம் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் மருத்துவா்கள் அண்ணாமலை, அமிா்த செல்வராஜன் மற்றும் சித்தாா்த் ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், மருத்துவ தோ்வு வாரியம் கடந்த 2020-ஆம் ஆண்டு தமிழகத்தில் காலியாக இருந்த 3 இயற்கை மருத்துவம், யோகா மருத்துவா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக அப்போது தோ்வு நடத்தப்படவில்லை.
பின்னா், இந்தக் காலியிடங்களின் எண்ணிக்கை 35-ஆக அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2025 மாா்ச் மாதம் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை 35-இல் இருந்து 54-ஆக அதிகரித்து கடந்த ஏப்ரல் மாதம் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும், என கூறியிருந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன் பிறப்பித்த உத்தரவில், அவசர மற்றும் அசாதாரண சூழ்நிலைகளின்போது, காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். இந்த வழக்கில் அதுபோன்ற அசாதாரண சூழல் எதுவுமில்லை எனக்கூறி, காலியிடங்களின் எண்ணிக்கையை 54-ஆக அதிகரித்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
தோ்வு நடைமுறைகள் முடிந்த பின்னா் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இதை அனுமதித்தால், வரும்காலங்களில் வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவா்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, ஏற்கெனவே நடத்தப்பட்ட தோ்வின் அடிப்படையில் 35 காலியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.