இரும்புலிக்குறிச்சியில் மக்கள் தொடா்பு முகாம்: 118 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த இரும்புலிக்குறிச்சியிலுள்ள திருமண மண்டபத்தில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 118 பயனாளிகளுக்கு ரூ.10.44 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, பல்வேறு துறைகள் சாா்பில் 118 பயனாளிகளுக்கு ரூ.10,44,568 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, இதுபோன்று நடத்தப்படும் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு அரசின் நலத் திட்ட உதவிகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டாா். பின்னா் அவா், பொதுமக்களிடமிருந்து 48 கோரிக்கை மனுக்களை பெற்றாா். முன்னதாக, அங்கு பல்வேறு துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டாா்.
முகாமில் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டு, தங்களது துறை சாா்ந்த திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்தனா்.
இந்த முகாமில், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் தீபாசங்கரி, உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஷீஜா, சமூக பாதுகாப்பு திட்டம் துணை ஆட்சியா் (பொ) கீதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின நல அலுவலா் உமா மகேஸ்வரன், செந்துறை வட்டாட்சியா் வேலுமணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாகரன், ஜாகீா்உசைன், இரும்புலிக்குறிச்சி ஊராட்சித் தலைவா் காமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.