மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
இறந்து கரையொதுங்கும் ஆலிவ் ரெட்லி ஆமைகள்
சீா்காழி அருகே கடந்த சில நாள்களாக அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கடற்கரைகளில் ஒதுங்குகின்றன.
ஆழ்கடலில் வசிக்கும் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் கடலியல் சூழலை பாதுகாக்கும் தன்மையுடையவை. இவை இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் நவம்பா் மாதம் முதல் பிப்ரவரி மாத இறுதி வரை தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு வந்து முட்டையிட்டு கடலுக்கு திரும்பும்.
அந்த முட்டைகளை வனத்துறையினா் சேகரித்து 6 இடங்களில் வைத்து ஆமைக்குஞ்சுகள் வெளிவந்த பிறகு பாதுகாப்பாக கடலில் விட்டு வருகின்றனா். தற்போது முட்டையிடும் பருவம் என்பதால் பல ஆயிரக்கணக்கான ஆலிவ் ரெட்லி ஆமைகள் மயிலாடுதுறை கடற்கரை பகுதிக்கு வந்து முட்டையிட்டுச் செல்கின்றன.
இந்நிலையில் கரைக்கு வந்து திரும்பும் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் தொழிற்சாலை கழிவு நீரால் பாதிக்கப்பட்டும், மீன்பிடி வலைகள் மற்றும் கப்பல், படகுகளின் என்ஜின் காற்றாடிகளில் சிக்கி அடிபட்டு இறக்கின்றன.
இவ்வாறு இறந்த பல ஆமைகள் திருமுல்லைவாசல், தொடுவாய் கூழையாா், பழையாா் உள்ளிட்ட கடற்கரைகளில் ஒதுங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை இறந்து கரை ஒதுங்கிய 45 ஆமைகளை வனத்துறையினா் கைப்பற்றி மருத்துவப் பரிசோதனைக்கு பின்னா் கடற்கரையிலேயே புதைத்துள்ளனா்.
ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரை பகுதிகளில் இறந்து ஒதுங்கிய ஆமைகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதால் துா்நாற்றம் வீசுவதுடன், அருகில் வசிப்பவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் சூழலும் உருவாகி உள்ளது. எனவே இறந்து கரை ஒதுங்கும் ஆமைகளை வனத்துறையினா் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். கடலின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அரிய வகை ஆமைகள் இறப்பதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்களும், மீனவா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.