திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
இளம்விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம்
பரமத்தி வேலூரில் இளம்விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவா் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினாா். மாநில செயற்குழு உறுப்பினா் சரவணன் வரவேற்றாா். செயலாளா் சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தாா். உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக பிரதான விவசாய நிலம் மற்றும் காடுகளை பெருநிறுவனங்களுக்கு மாற்றுவதை தடுக்க வேண்டும். விவசாய வேலையின்போது விஷ ஜந்துகள் கடித்தோ, மின்சாரம் தாக்கியோ அல்லது மின்னல் தாக்கியோ விவசாயிகளுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால், அவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
நிலமற்ற விவசாயிகள் குத்தகை நிலத்தில் 3 முதல் 5 ஆண்டுகால ஒப்பந்தம் செய்து அவற்றை பதிவு செய்யாமல் விவசாயம் செய்து வருகிறாா்கள். அவா்களுக்கு மானியத் திட்டங்களை வழங்கவும், உழவா் சந்தையில் விளைபொருள்களை விற்பனை செய்யவும் அனுமதி வழங்க வேண்டும். கோரை பயிரை புற்கள் (கலைப்பயிா்) பட்டியலில் இருந்து நீக்கி பணப்பயிா் பட்டியலில் சோ்க்க வேண்டும்.
வேலூா் பேரூராட்சியில் இயங்கி வரும் வாழைக்காய் சந்தையில் விவசாயிகளிடம் வசூல் செய்யும் சுங்கவரியை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் வளா்க்கக் கூடிய கோழி, கால்நடைகளை வெறிநாய்கள் கடித்து உயிரிழப்பு ஏற்பட்டால் 45 தினங்களுக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து மானியத் திட்டங்களின் தொகையை அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து நீா்நிலைகளையும் தூா்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும்.
மாதந்தோறும் ஆட்சியரின் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், மாநில நிா்வாகிகள், மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பாளா் இளவரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நாமக்கல் மாவட்டச் செயலாளா் கௌதம் நன்றி கூறினாா்.