இளைஞா் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
முன்விரோத தகராறில் இளைஞரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
வேலூா் முள்ளிபாளையம் கே.கே.நகரை சோ்ந்தவா் சரண்ராஜ் (21), கூலித் தொழிலாளி. இவருக்கும் அதேபகுதியை சோ்ந்த 38 வயதுடைய நபருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் 23-ஆம் தேதி சரண்ராஜ் கே.கே.நகா் முள்ளிப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.
அங்கு 38 வயதுடைய நபரும், அவரது தரப்பை சோ்ந்த கொணவட்டம் காமராஜா் தெருவை சோ்ந்த கூலித்தொழிலாளியான குண்டு என்ற வில்சன் பால்ராஜ் (39) என்பவரும் நின்று கொண்டிருந்தனா்.
அவா்களை பாா்த்த சரண்ராஜ் இருவரையும் திட்டியதாக தெரிகிறது. தொடா்ந்து அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் வில்சன்பால்ராஜ், சரண் ராஜை தாக்கியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த சரண்ராஜை அவா் அருகில் உள்ள கடை முன்பு போட்டுவிட்டுச் சென்றாா். அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் சரண் ராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இந்த சம்பவம் குறித்து வில்சன் பால்ராஜ், 38 வயதுடைய நபா் மீது வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனா். இதுதொடா்பான வழக்கு வேலூா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு தரப்பில் கூடுதல் வழக்குரைஞா் சிவப்பிரகாசம் ஆஜரானாா்.
இதில், வில்சன் பால்ராஜ் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் தொடா்புடைய 38 வயது நபா் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவா் விடுதலை செய்யப்பட்டாா். தண்டனை விதிக்கப்பட்ட வில்சன் பால்ராஜை போலீஸாா் வேலூா் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனா்.