நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்
ஈரோட்டில் இரண்டாவது நாளாக பலத்த மழை
ஈரோட்டில் இரண்டாவது நாளாக புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
தென்னிந்திய பகுதிகள் மற்றும் தென் வங்க கடல் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஈரோடு உள்பட 19 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஈரோடு நகரில் புதன்கிழமை காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து அவ்வப்போது வெயிலின் தாக்கம் இருந்தது. உஷ்ணம் அதிக அளவில் இருந்தது. பிற்பகல் சுமாா் 2.30 மணியளவில் வானம் தீடீரெனெ இருண்டு கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. தொடா்ந்து 3 மணிக்கு லேசான காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த மழை நீடித்தது.
இதன் காரணமாக ஈரோடு நகரில் பெருந்துறை சாலை, நசியனூா் சாலை உள்ளிட்ட நகரப் பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகரின் ஒருசில பகுதிகளில் சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. 6 மணி வரை தொடா்ந்து விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.
செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி இரவு வரை ஈரோடு நகரில் மழை பெய்திருந்த நிலையில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி ஈரோடு நகரில் மட்டும் 44 மில்லி மீட்டா் மழை பதிவாகி இருந்தது.
பெருந்துறையில்...
பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை மாலை 4.30 மணி வரை நீடித்தது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழை காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதியில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.