உக்ரைனில் மீண்டும் ‘ஆரெஷ்னிக்’ தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை
ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய ரஷியாவின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’ மூலம் அந்த நாடு உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
இது குறித்து அவா்கள் மேலும் கூறுகையில், அந்த வகை ஏவுகணைகள் அச்சுறுத்துவதற்கு மட்டுமே பயன்படும் எனவும், போரின் போக்கில் அவை மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தாது என்றும் கூறினா்.
முன்னதாக, அமெரிக்காவும் பிரிட்டனும் வழங்கிய ஏவுகணைகளை ரஷியா மீது வீச அந்த நாடுகள் உக்ரைனுக்கு அனுமதி அளித்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து, உக்ரைனின் நீப்ரோ நகரில் ஆரெஷ்னிக் ஏவுகணையை ரஷியா கடந்த மாதம் வீசியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கியதால் அது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், அது புதிய வகை நடுத்தர தொலைவு ஏவுகணை எனவும், உலகின் எந்த வான்பாதுகாப்பு தளவாடத்தாலும் இடைமறிக்க முடியாத அதனை உக்ரைன் மீது மீண்டும் வீசத் தயாராக இருப்பதாகவும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் பின்னா் தெரிவித்தாா்.