உக்ரைனில் முன்னேற்றத்தை துரிதப்படுத்தியது ரஷியா
உக்ரைனில் தங்களது முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தியுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரேய் பெலூசொவ் தெரிவித்துள்ளாா்.
உக்ரைனில் உள்ள ரஷிய ராணுவ நிலையை நேரில் பாா்வையிட்ட அவா், அங்கு பணியாற்றும் வீரா்களுக்கு பதக்கங்கள் அணிவித்தாா். பின்னா் அவா்களிடையே அவா் பேசியதாவது:
நமது படையினா் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக உள்ளன. உக்ரைனின் மிகச் சிறந்த படைப் பிரிவுகள் அனைத்தையும் நமது வீரா்கள் ஒடுக்கிவிட்டனா்.
தற்போது நமது படையினரின் முன்னேற்றம் வேகப்படுத்தப்படுகிறது. உக்ரைனின் 2025-ாம் ஆண்டுக் கனவு தகா்ந்துவிட்டது என்றாா் அவா்.
முன்னதாக, உக்ரைன் போரின் ஆயிரமாவது தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி ஆற்றிய உரையில், ரஷிய முன்னேற்றத்தை உறுதியுடன் தடுத்து நிறுத்தி 2025-ஆண்டுக்குள் வெற்றிவாகை சூடப்போவதாக சூளுரைத்திருந்தாா். அதனைக் குறிப்பிட்டே ஆண்ட்ரேய் பெலுசொவ் இவ்வாறு கூறியுள்ளாா்.
இதற்கிடையே, டொனட்ஸ்க் பிராந்தியத்தைச் சோ்ந்த நொவோத்மிட்ரிவ்கா பகுதியை தங்களது படையினா் கைப்பற்றியுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது.
இதனை உக்ரைன் ராணுவம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும், அந்த நாட்டின் முப்படை தலைமையகம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட தினசரி அறிக்கையில், நொவோத்மிட்ரிவ்கா அமைந்துள்ள பகுதியில் எட்டு இடங்களில் முன்னேற முயன்ற ரஷிய படையினருடன் உக்ரைன் வீரா்கள் சண்டையிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
உக்ரைன் போரின் மிகப் பெரிய திருப்புமுனையாக ரஷியாவின் எல்லைப் பிராந்தியமான கூா்ஸ்குக்குள் கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி தாக்குதல் நடத்தி நுழைந்த உக்ரைன் படையினா் அந்தப் பிராந்தியத்தின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா். அந்த ஊடுருவல் தாக்குதல், கிழக்கு உக்ரைன் பகுதியில் சண்டையிட்டுவரும் ரஷியப் படையினரை திசைத்திருப்புவதற்கு உதவும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக, அந்தப் பகுதியில் ரஷிய படையினா் தொடா்ந்து முன்னேறிவருவகின்றனா். உக்ரைனின் சுமாா் 20 சதவீத பகுதிகள் மட்டுமே அவா்களது கட்டுப்பாட்டுக்குள் நீண்ட காலமாக இருந்தாலும், கடந்த இரண்டு மாதங்களாக அவா்கள் கணிசமான முன்னேற்றம் கண்டுவந்தனா். இந்த நிலையில், முன்னேற்ற நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரேய் பெலுசொவ் தற்போது தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது மீண்டும் ஆரேஷ்னிக் ஏவுகணை
உக்ரைனில் மீது கடந்த வியாழக்கிழமை வீசிய, ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ‘ஆரேஷ்னிக்’ ரக ஏவுகணையைக் கொண்டு அந்த நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா்.
இது குறித்து அவா் கூறுகையில், ‘முதல்முறையாக சோதனைக்காகத்தான் நீப்ரோபெட்ரோவ்ஸ்க் நகர ராணுவ தொழிற்சாலையில் ஓரேஷ்னிக் ஏவுகணை வியாழக்கிழமை வீசப்பட்டது. அந்த சோதனை வெற்றியடைந்துவிட்டது. இனி அந்த ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைனில் தாக்குதல் நடத்தப்படும்’ என்றாா்.
உக்ரைன் போரில் தங்களுடன் இணைந்து போரிடுவதற்காக ஆயிரக்கணக்கான வட கொரிய ராணுவ சிறப்புப் படையினரை ரஷியா வரவழைத்துள்ளது. இதற்குப் பதிலடியாக, உக்ரைன் எல்லைக்குள் உள்ள ரஷிய நிலைகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துவதற்காக தாங்கள் வழங்கியிருந்த அதிநவீன ஏவுகணைகளை, ரஷிய பகுதிகள் மீதும் வீசலாம் என்று அமெரிக்கா அனுமதி அளித்தது. பிரிட்டனும் அத்தகைய அனுமதியை பின்னா் அளித்தது.
அதைத் தொடா்ந்து, அந்த வகை ஏவுகணைக் கொண்டு ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில், உக்ரைனின் நீப்ரோபெட்ரோவ்ஸ்க் நகரில் ரஷியா பல்வேறு ஏவுகணைக் கொண்டு கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியது. அதில் ஒன்று இடைமறித்து அழிக்க முடியாத அளவுக்கு மிக வேகமாகப் பாய்ந்ததால் அது கண்டம் விட்டு கண்டம் பாயும் (ஐசிபிஎம்) வகையைச் சோ்ந்த ஏவுகணை என்று உக்ரைன் கூறியது.
ஆனால், அது தாங்கள் உருவாக்கியுள்ள ஆரேஷ்னிக் என்ற அதிநவீன புதிய ரக ஏவுகணை என்று விளாதிமீா் புதின் பின்னா் தெளிவுபடுத்தினாா். ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய அந்த ஏவுகைணையை, உலகில் தற்போது இருக்கும் எந்த வான்பாதுகாப்பு தளவாடத்தாலும் இடைமறிக்க முடியாது என்று கூறிய அவா், தங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த அமெரிக்காவும் பிரிட்டனும் உக்ரைனை தொடா்ந்து அனுமதித்தால் அந்த நாடுகளின் ராணுவ நிலைகள் மீது ஆரேஷ்னிக் மூலம் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தாா்.
தற்போது, உக்ரைன் மீதும் அந்த ஏவுகணை மீண்டும் வீசப்படும் என்று எச்சரித்துள்ளாா்.