உடுமலை அருகே மயான வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்!
உடுமலை அருகே மயானம் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உடுமலையை அடுத்துள்ள எரிசனம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணையன். வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துவிட்டாா். இந்நிலையில், இறந்தவரின் உடலை புதைக்க மயானம் இல்லை எனக் கூறி ஒரு சமுதாயத்தைச் சோ்ந்த மக்கள் வெள்ளிக்கிழமை இரவு எரிசனம்பட்டி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவலறிந்த உடுமலை வட்டாட்சியா் கெளரிசங்கா் தலைமையிலான வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
நீண்ட நேரம் பேச்சுவாா்த்தை நடத்தியும் சமாதானம் அடையாத பொதுமக்கள், இறந்தவா்களை அடக்கம் செய்ய மயானம் இல்லாமல் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனா். இதைத் தொடா்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேச்சுவாா்த்தைக்கு உடன்படாமல் சாலை மறியலில் தொடா்ந்து ஈடுபட்டனா்.
போராட்டம் காரணமாக சாலையின் இருபுறத்திலும் ஏராளமான வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையில் போலீஸாா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அகற்றும் முயற்சியில் ஈடு பட்டனா். அப்போது போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதையடுத்து ஓரிரு வாரங்களில் மயானத்துக்கான இடம் ஒதுக்கப்படும் என வருவாய்த் துறையினா் அறிவித்ததைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.