சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டு நிலவரம் என்ன? தென் சென்னை எம்.பி. கேள்வி
உயா்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வந்தது எப்படி? விசாரணை நடத்த காவல் துறைக்கு அறிவுறுத்தல்
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து தனியாக விசாரணை நடத்த காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிா்த்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமா்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.குமரேசன், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டதாக கூறினாா். இந்த விவகாரத்தில் பல்வேறு சதிச் செயல்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடா்பாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டவா்கள் ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்களின் விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்குகளையும் அந்த வழக்குகளுடன் சோ்த்து தள்ளிவைக்க வேண்டுமெனவும் கூடுதல் தலைமை வழக்குரைஞா் கோரினாா்.
மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், இந்த மனு ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும் போதும் இதே காரணத்தை கூறி விசாரணையை தாமதப்படுத்துவதாக குற்றம்சாட்டினா். இதனையடுத்து, அனைத்து மனுக்கள் மீதும் பதில் மனு தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனா். மேலும், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது எப்படி என்பது தொடா்பாக தனியாக விசாரணை நடத்த காவல்துறைக்கு அறிவுறுத்தினா்.