உரிய பாதுகாப்பின்றி தீப்பெட்டி ஆலைக் கழிவுகளை கொட்டியவா் மீது வழக்கு
தீப்பெட்டி ஆலைக் கழிவுகளை உரிய பாதுகாப்பின்றி கொட்டியது தொடா்பாக, ஆலையை நடத்தி வருபவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கோவில்பட்டி நடராஜபுரம் 9ஆவது தெருவில் பத்மநாபன் மகன் வெங்கடேசன் என்பவா் தீப்பெட்டி ஆலை நடத்திவருகிறாா். ஆலையின் பின்புறம் உரிய பாதுகாப்பின்றி கொட்டப்பட்ட மருந்துக் கழிவுகள் கடந்த 16ஆம் தேதி தீப்பற்றி எரியத் தொடங்கியதாம்.
ஆலையில் பணியாற்றிவந்த 18 வயது சிறுவன் உள்ளிட்ட இருவா் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிறுவனின் கை, கால், கழுத்துப் பகுதிகளில் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இந்நிலையில், சிறுவன் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ப. வெங்கடேசனிடம் விசாரித்து வருகின்றனா்.