மகா தீபம்: ஜோதியாய் எழுந்தருளிய அண்ணாமலையார்... பக்தி முழக்கத்தில் அதிரும் திருவ...
உலக சாம்பியன்ஷிப் வென்றாலும் நான் சிறந்த வீரரில்லை: குகேஷ்
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் டி. குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற 14வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டிங் லிரெனை 58வது நகர்த்தலில் குகேஷ் வீழ்த்தினார்.
இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ரஷிய வீரர் கேரி காஸ்பரோவ், இதுவரை அந்தப் பெருமை பெற்றிருந்தார். இவர் 22 வயதில் சாம்பியனானார். ஆனால், குகேஷ் இந்த சாதனையை 18 வயதில் முறியடித்துள்ளார்.
பலரும் குகேஷுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு அளிப்பதாகக் கூறியுள்ளது.
உலகின் நம்.1 வீரர் கார்ல்செனும் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், குகேஷ் கூறியதாவது:
என்னுடைய 6 - 7 வயதிலிருந்தே இதனைக் கனவு கண்டு அதிலேயே வாழ்ந்துவந்தேன். இந்த நாளுக்காக 10 ஆண்டுகாலமாக உழைத்தேன். இதைவிட சிறந்த உணர்வு இருக்க முடியாது. என்னை நேசித்த நாட்டு மக்களுக்கு இந்த வெற்றியை உரித்தாக்குகிறேன்.
நான் சிறந்த வீரரில்லை
உலக செஸ் சாம்பியன் வென்றுவிட்டதால் நான் சிறந்த வீரராக முடியாது. அது மாக்னஸ் கார்ல்சென் மட்டுமே. அவர் அடைந்திருக்கும் உயரத்தை நான் அடைய வேண்டும். உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் அவருடன் விளையாடியிருந்தால் மிகவும் சவாலானதாக இருந்திருக்கும்.
அவருடன் விளையாடினால்தான் என்னுடைய பலம் எப்படி இருக்கிறதென தெரியும். ஆனால், கார்ல்சென் இந்தப் போட்டிகளில் இருந்து விலகிவிட்டார் என்றார்.