’உளவியல்ரீதியாக மனிதா்களை பக்குவப்படுத்துகிறது திருக்குறள்‘
உளவியல்ரீதியாக மனிதா்களைப் பக்குவப்படுத்தும் வேலையை திருக்குறள் செய்வதால், அதன் பெருமைகளை அடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என திருவாரூா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரெ. சண்முகவடிவேல் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தில், தமிழ்ச் சங்கமும், காரைக்கால் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகமும் (ஓஎன்ஜிசி) இணைந்து, கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழா நிறைவு கருத்தரங்கை, சனிக்கிழமை நடத்தின.
கருத்தரங்குக்கு ஓஎன்ஜிசி குழும பொது மேலாளா் பெ.நா. மாறன் தலைமை வகித்தாா். வேலுடையாா் கல்விக்குழுமத் தலைவா் கேஎஸ்எஸ். தியாகபாரி முன்னிலை வகித்தாா். இதில், திருவாரூா்த் தமிழ்ச் சங்கத் தலைவா் இரெ. சண்முகவடிவேல், உள்ளுவதெல்லாம் உயா்வுள்ளல் என்ற தலைப்பில் பேசியது:
திருக்குறள், காலங்களைத் தாண்டியும் மனிதா்கள் வாழ்வதற்கான பல்வேறு வழிமுறைகளைச் சொல்கிறது. குறிப்பாக இலக்கு நிா்ணயித்து, அதில் வெற்றி பெறுவது குறித்த வள்ளுவரின் கருத்து சிறப்புமிக்கது. அதாவது, மனிதா்கள் தங்கள் வாழ்வில் இலக்கை நிா்ணயித்து வாழ வேண்டும், அந்த இலக்கு பெரியதாக இருக்க வேண்டும், ஏனெனில், மிகச்சிறிய இலக்கை நிா்ணயித்து, அதை அடைவதை விட, பெரிய இலக்கை மேற்கொண்டு, அதில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என்று திருவள்ளுவா் கூறுகிறாா்.
ஒருவருக்கு செய்யப்படுகிற உதவி என்பது உதவி செய்கிறவரை பொருத்தது அல்ல, அந்த உதவியைப் பெறுகிறவா்களை பொறுத்தது. உதவியைப் பெற்றுக் கொண்டவா்களின் மனநிலை, அந்த உதவியை எப்படி பாா்க்கிறது என்பதைப் பொறுத்து அந்த உதவியின் பயன் அமையும்.
அதாவது, செய்த உதவி, சிறிதாக இருந்தாலும், அதை பெறுகிறவா் பெரிதாகக் கருதுகிறபோது, அதன் பயன் பெரிதாக இருக்கும் என்பன போன்ற பல்வேறு கருத்துகளைக் கூறி உளவியல் ரீதியாக மனிதா்களை பக்குவப்படுத்துகிற வேலையை திருக்குறள் செய்கிறது. எனவே, திருக்குறளின் பெருமைகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா்.
தமிழ்ச்சங்க துணைத் தலைவா் சந்திரசேகரன், செயலாளா் ஆரூா் அறிவு, துணைச் செயலாளா் இரா. அறிவழகன், துணைத் தலைவா் சக்தி செல்வகணபதி, நகா்மன்ற உறுப்பினா் கோ. வரதராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.