உஷார்: `பங்குச்சந்தையில் அதிக லாபம் பாக்கலாம்' - 75 வயது முதியவரிடம் ரூ.11 கோடியை ஏமாற்றிய கும்பல்!
மும்பையில் இரண்டு நாள்களுக்கு 77 வயது மூதாட்டியை சைபர் கிரிமினல்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்து அவரிடமிருந்து ரூ.3.80 கோடியை அபகரித்தனர். இது போன்ற டிஜிட்டல் கைது மோசடிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் மறுபுறம் பங்குச்சந்தையில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ஒரு கும்பல் மோசடி செய்து வருகிறது. இது போன்ற மோசடியில் ஓய்வு பெற்ற முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். மும்பையை சேர்ந்த 75 வயது ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன் ஒருவர் வீட்டில் இருந்தபடி பங்குச்சந்தையில் பணம் முதலீடு செய்து வந்தார். அவரது மொபைல் நம்பர் கடந்த ஆகஸ்ட் மாதம் வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் சேர்க்கப்பட்டு இருந்தது. பிரபல நிதி நிறுவனம் பெயரில் அது அனுப்பப்பட்டு இருந்தது. அதனை அன்யா ஸ்மித் என்பவர் அனுப்பி இருந்தார். அதில் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் முதலீடு செய்யலாம் என்று என்று ஸ்மித் குறிப்பிட்டு இருந்தார்.
ஏற்கனவே கப்பல் கேப்டன் பங்கு வர்த்தகத்தில் இருந்ததால், தான் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டார். இதையடுத்து அப்பெண் முதியவர் நம்பரை வேறு ஒரு குரூப்பில் சேர்த்துவிட்டார். அதில் ஒரு லிங்க் அனுப்பினார். அந்த லிங்க்கை கிளிக் செய்து அப்பெண் சொன்ன மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்து கொண்டார். அதன் மூலம் முதியவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தார். இதற்காக ஸ்மித்தும், அவரது கூட்டாளிகளும் சொன்ன வங்கிக் கணக்கிற்கு முதியவர் பணத்தை டிரான்ஸ்பர் செய்தார். பல வங்கிக் கணக்கில் பணத்தை டிரான்ஸ்பர் செய்ய சொன்னபோது முதியவர் சந்தேகம் அடைந்தார். இது குறித்து ஸ்மித்திடம் கேட்டதற்கு, வரியை சேமிக்க இது போன்று செய்வதாக தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 5-ம் தேதியில் இருந்து அக்டோபர் 19-ம் தேதி வரை 11.16 கோடியை முதியவர் முதலீடு செய்தார். பணத்தை 22 பரிவர்த்தனைகள் மூலம் அனுப்பி வைத்தார். அவர் முதலீடு செய்த பணத்திற்கு பங்குச்சந்தையில் நல்ல லாபம் கிடைப்பது போன்று மொபைல் ஆப்பில் காட்டியது. இதனால் முதியவருக்கு எந்த வித சந்தேகமும் வரவில்லை. ஒரு கட்டத்தில் லாபத்தை மட்டும் எடுக்கலாம் என்று நினைத்த முதியவர் பணத்தை எடுக்க முயன்ற போது எடுக்க முடியவில்லை. உடனே முதியவர் இதற்கு உதவும்படி ஸ்மித்திடம் கேட்டுக்கொண்டார். அப்பெண் பணத்தை எடுக்க மொத்த தொகையில் 20 சதவீதத்தை சேவை வரியாக செலுத்தும்படி கேட்டுக்கொண்டார்.
முதியவரும் அப்பணத்தை கட்டினார். அப்படி இருந்தும் மேற்கொண்டு வேறு சில கட்டணங்கள் என்று கூறி தொடர்ந்து பணம் கட்டும்படி கூறிக்கொண்டிருந்தார் ஸ்மித். இதனால் அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த முதியவர் நேரடியாக சம்பந்தப்பட்ட பைனான்ஸ் கம்பெனிக்கு சென்று விசாரித்தார். அங்கு சென்று விசாரித்தபோதுதான் முதியவர் போலி மொபைல் ஆப்பில் முதலீடு செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து உடனே முதியவர் போலீஸில் புகார் செய்தார். போலீஸாரின் விசாரணையில், யுகே வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ, கனரா, பந்தன் வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கேதலிக் சிரியன் வங்கிகளின் 12 கிளைகளில் முதியவர் பணத்தை டிரான்ஸ்பர் செய்திருந்தார். அக்கிளைகளுக்கு போலீஸார் கடிதம் எழுதி மேற்கொண்டு தகவல்களை கேட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் மும்பை மேற்கு புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவரை டிஜிட்டல் முறையில் கைது செய்து 25 கோடியை சைபர் கிரிமினல் அபகரித்தனர். பொதுமக்கள் தங்களுக்கு வரும் வாட்ஸ்அப் தகவல்கள், போன் கால்களில் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.